Friday 29 July 2011

நீண்டு இருக்கின்றன......

உன்னை
நினைப்பதில் பாதி
உன்னை
மறப்பதில் பாதி
இப்படியே கழிகிறது
என் ஆயுள்
•மலர்த் தொடுக்கிறாய்
உன் சுவடுகளைத்
தொடர்ந்து வரும்
என்னைப் போலவே
அந்த வாழை நார்
•கூண்டை கட்டி முடிக்க
கடைசி சுள்ளிக்காகப்
பறந்த பறவை
கூடு திரும்பாததுபோல
நீ
•உன் அழகை
கண்ணாடியில்
ரசித்துக்கொள்கிறாய்
உன் தோட்டத்திலும்
ஒரு கண்ணாடி வை
பூக்களும்
தங்கள் அழகை
ரசித்துக்கொள்ளட்டும்
•வரம் தந்த சாமிக்கு
அப்போது
கண் இல்லை
இப்போது
வாய் இல்லை
•நான்
பழைய நினைவுகளோடு
பேசிக்கொண்டிருக்கிறேன்
தெளிந்த பைத்தியமாய்
•எனக்குத் தெரியும்
என் உயிர்
எந்தத் திசையை நோக்கிப்
போகும் என்று
•நீ
தலைவிதி என்கிறாய்
சோதிடன்
கை ரேகை என்கிறான்
குடுகுடுப்பைக்காரனோ
போன ஜென்மம்
குறித்துப் பேசுகிறான்
•நினைவுகள்
திரும்பி பார்க்கின்றன
நீண்டு இருக்கின்றன
மாலை நேரத்து
நிழல்போல

No comments: